சீனாவிற்கு மாணிக்கக் கற்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கக் கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதியில் மறைத்து வைத்து எடுத்துச்செல்ல முற்பட்ட நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர்களென தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் சீனாவின் ஷெங்டு நகருக்குப் பயணிக்கும் சீன விமான சேவைக்குரிய CA-426 விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த நிலையில் சுங்க அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகளை முன்னெடுத்த போது மாணிக்கக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாணிக்கக் கற்களின் பெறுமதி சுமார் மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.









