முன்னாள் ஜனாதிபதிகள் கைவிடும் அனைத்து சிறப்புரிமைகளையும் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த அரசாங்கம் தயாரென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கு எவர் மீதான பழிவாங்கலும் காரணம் அல்ல.
அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக நாட்டு மக்களுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை வேலைத் திட்டத்திற்கு இணங்க , பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் ஒரு அம்சமாகவே இதனைக் குறிப்பிட முடியும்.
அதிகாரங்களில் உள்ள சிலரும் தமது சிறப்புரிமைகளைப் பெற்று வாழ்கின்றனர். அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வீடுஇ வாகன அனுமதிப்பத்திரம், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் எரிபொருள் கொடுப்பனவு என்பன குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஓய்வு பெற்றுள்ள ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டத்தின் மூலம் சில சிறப்புரிமைகள் இழக்கப்படுகின்றன. இது அரசியல் கலாசாரத்தின் மாற்றமே தவிர பழிவாங்குதல் அல்ல. இந்த சட்டம் எந்த விதத்திலும் பாதுகாப்போடு தொடர்புபட்டதல்ல. எவருக்காவது பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்டால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட குழுவுக்கு விடயங்களை தெரிவித்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.நாட்டில் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் நீண்ட காலம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வந்தது.
.அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யாவிட்டால், அவற்றை சில மட்டுப்படுத்தலின் கீழ் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தினோம். பாதுகாப்புக்கு மேல்திகமாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பணிக்குழு வழங்கப்பட்டிருந்தது. சில சிறப்புரிமைகள் மட்டுப்படுத்தலின்றி உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் பொதுமக்களின் நலனுக்கென பயன்படுத்தும் நோக்கில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார்.









