மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கைஇ அம்பர் நிறத்தில் பெயரிடப்பட்டுள்ளதுடன், நாளை (ஓகஸ்ட் 06) பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும்.
மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக, மகாவலி கங்ககைக்கு உட்பட்ட உடுநுவர, உடபலாத, யடிநுவர,தொலுவ, கங்க இஹல கோரள, கங்கவட கோரள மற்றும் ஹாரிஸ்பத்துவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே முக்கியமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கைக்கு அருகில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








