போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அத்துடன் நின்றுவிடாமல் அந்த நிலைமை அதிகரித்து வருகின்றமை குறித்து கவனம் செலுத்தி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டது.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் எல்லையற்ற செல்வத்துடன் தொடர்புடைய குற்றவியல் சூழலானது தற்போது பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத்துறைக்கும், சமூக ஒழுக்க நெறிக் கட்டமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றங்கள் தொடர்பில் அஞ்சும் சமூகத்தை உருவாக்குவதற்காக, கடுமையான விதிகளைச் செயற்படுத்த வேண்டிய அவசியமும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையில் கலந்துரையாடப்பட்டது.
முழு சமூக கட்டமைப்பையும் வீழ்ச்சியடையச் செய்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரைப் பலிகொண்டிருக்கும் போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிப்பதற்காக நாட்டில் நடைமுறைச் செயற்பாடும், வேகமான கருத்தியல் மாற்றமும் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே வரைவின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், அது விரைவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்குக் காரணமான அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் செயற்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவில் விரைவுபடுத்தி உள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதன் காரணமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்குரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகளுக்கேற்ப (5 கிராமுக்குக் குறைவு, 10 கிராமுக்குக் குறைவு போன்றவாறு) குறிப்பிட்ட தரவு வகைப்படுத்தலைச் சமர்ப்பிக்குமாறும், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முறையான செயற்பாடு ஒன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கும் அதன் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்ததுடன், ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கடற்படையின் உதவி பெறப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. பாதுகாப்புக் கேமரா தொகுதியைப் பொருத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.
சிறைச்சாலைகளில் தற்பொழுது உள்ள நிலைமை குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை, குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதம் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
சிறைக்கைதிகள் வன்முறையாக நடந்து கொள்வதைக் குறைப்பதற்காக, அதிகளவில் மனநல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்டத்தின் திருத்த வரைபை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சட்டவரைவுத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் இணைத்து செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைக் கட்டமைப்பில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக, கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளால் கூட்டாகச் செயல்படுத்தப்படும் ‘மிதுரு பாடசாலை’ வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன். மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தும் பிள்ளைகளைக் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுவதில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
அதிக போதைப்பொருள் அபாயம் மற்றும் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், சர்வதேசப் பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்பதும் இங்கு தெரியவந்ததுடன், தேசிய செயற்பாடு சபை இது குறித்து விசேட கவனம் செலுத்தியது.
பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துக் கொள்ளும் வகையில் போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது என்றும், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து கவனத்துடன் இருப்பதன் முக்கியத்துவமும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப்பொருட்களை ஊக்குவிக்கும் குழுக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், போதைப்பொருளுக்கு எதிரான கருத்துக்களைச் சமூகமயமாக்குவதற்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.








