சிம்பாப்பே அணிக்கெதிரான 3 போட்டிகளைக் கொண்ட ருவென்றி – 20 தொடரை 2-1 என இலங்கையணி கைப்பற்றியுள்ளது. தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான போட்டி ஹராரே விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் இலங்கையணி 8 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே அணியினர் 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து, 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். மருமானி 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கையணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமந்த 3 விக்கட்டுகளையும். ச்சமீர விக்கட்டுகளையும் கைப்பற்றினர். 192 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணிக்கு பெத்தும் நிசங்க, குசல் மென்டிஸ் ஜோடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இலங்கையணி முதல் பவர் பிளேயில் 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. விக்கட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் கமில் மிஷார , குசல் பெரேரா ஜோடி ஆடுகளத்தில் சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். 43 பந்துகளில் 73 ஓட்டங்களை கமில் மிஷாரவும்,26 பந்துகளில் 46 ஓட்டங்களை குசல் பெரேராவும் பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். போட்டியின் ஆட்டநாயகனாக கமில் மிஷாரவும், தொடர் நாயகனாக துஷ்மந்த ச்சமீரவும் தெரிவுசெய்யப்பட்டனர்.









