பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெம்பியன் நகரம் மற்றும் கெம்பியன் தோட்டத்தின் கீழ்ப் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் பிரதான நீர்க்குழாய் அமைப்பை பல இடங்களில் சேதப்படுத்தியதாக கூறப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெம்பியன் தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு நிலையத்திலிருந்து தேயிலைத் தோட்டம் ஊடாக, நகரத்திற்கு மேலுள்ள நீர்த்தாங்கிக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான குழாயே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (27) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கெம்பியன் நகர வர்த்தகர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், பொகவந்தலாவ பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு அதே தோட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது, சேதப்படுத்தப்பட்ட நீர்க்குழாயின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் குடிநீர் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளதுடன், கெம்பியன் நகர வர்த்தகர்களும் சுமார் 225 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கெம்பியன் நகர வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.









