இந்தியாவின் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைச் சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளார்.
தனது பெயரை வெளியிட விரும்பாத குறித்த பக்தர், திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே தனிநபர் ஒருவர் வழங்கும் மிகப்பெரிய காணிக்கையாக இந்தத் தங்க ஆபரணங்களை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தம் 9 தொகுப்புகளாகத் தயாரிக்கப்பட்டுள்ள 43 வகையான தங்க ஆபரணங்கள் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி கோவிலுக்கு வழங்கப்படவுள்ளன.
கிரீடம், தங்கப் பாதுகைகள் மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட தங்க மாலைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்வதற்காக, ஐந்து மாதங்களுக்கு முன்னர் குறித்த பக்தர் தேவஸ்தானத்தின் கருவூல அறைக்குச் சென்று அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, தங்க ஆபரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நவம்பர் 26ஆம் திகதி திருமலை கோவிலின் ரங்கநாயகர் மண்டபத்தில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மாபெரும் தங்கக் காணிக்கை தற்போது இந்தியாவில் பக்தர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.







