இந்தோனேசியாவில் மிட்டாய் உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 36 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஜாவா மாகாணத்தின் பான்டென் பகுதியில் அமைந்துள்ள PT Fonusa Agung Mulia என்ற தொழிற்சாலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, கட்டடம் முழுவதும் வேகமாகப் பரவியதுடன், பாரிய கரும்புகை எழுந்துள்ளது.
தீ விபத்தில் இருந்து 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், காணாமல் போன 36 தொழிலாளர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ விபத்து இடம்பெற்று 12 மணித்தியாலங்களுக்கும் மேலாகியும் தொழிற்சாலையின் சில பகுதிகளில் தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்ததால், மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தொழிற்சாலையின் மூன்றாவது மாடியிலுள்ள குளிரூட்டும் சாதனப் பகுதியிலிருந்து தீ பரவியிருக்கலாம் என உயிர் தப்பிய சிலர் தெரிவித்துள்ள போதிலும், தீ விபத்துக்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
காணாமல் போனவர்களை மீட்பதற்காக தீயணைப்புப் படையினர், மீட்புக் குழுவினர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் இணைந்து தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







