2027ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான பாடத்திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் இணைந்து இந்தப் பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தியை மேம்படுத்தி, சிறுவர்களுக்கு முறையான ஆரம்பக் கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
மேலும், கல்விச் சீர்திருத்தம், அரச சேவையின் வினைத்திறன், பொதுப் போக்குவரத்து நவீனமயமாக்கல் மற்றும் பெண் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளிலும் 2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.







