நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட நோர்வூட் நியூவெளி தொழிற்சாலை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க அடிக்கல் நாட்டப்பட்ட காணி பலவந்தமாக பிரதேசத்தை சேர்ந்த அரச அதிகாரி ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணி அமைச்சர் ஜீவன் தொண்டைமானின் தலையீட்டை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரி ஒருவர் தான் பணி புரியும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வீட்டு பயனாளிகளை மிரட்டி இடத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டடிருந்ததாக பொதுமக்கள் வழங்கிய முறைபாட்டின் அடிப்படையில் நேரில் சென்று சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்துள்ளார்.
குறித்த இடம் , காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்து , அதனை தோட்ட
நிர்வாகம் முறையாக பெற்றுக்கொண்டுள்ள நிலையில் , முறைகேடாக காணி அபகரிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சக்திவேல், காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளும் அதன்போது அங்கு வருகைதந்திருந்தனர்.








