இயற்கை அனர்த்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை மற்றும் அம்பேவெலவிற்கு இடையில் ரயில்களை நாளை முதல் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, பதுளை ரயில் நிலையத்திலிருந்து மு.ப 9.00 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு ரயில் சேவைகள் அம்பேவெல வரையிலும், அம்பேவெல ரயில் நிலையத்திலிருந்து மு.ப 9.30 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு ரயில் சேவைகள் பதுளை வரையிலும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு (AC) முன்பதிவு ஆசனங்களைக் கொண்ட இரண்டு பெட்டிகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு முன்பதிவு ஆசனங்களைக் கொண்ட தலா ஒரு பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும்.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரயில் பயணிகளின் நலன்கருதி, பதுளைக்கும், அம்பேவெலயிற்குமிடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிழக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் திருகோணமலைக்கு இடையிலான ரயில் சேவைகளும் நாளை முதல் இயக்கப்படவுள்ளன.








