ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மானில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் இமேஷா துலானி 38 பந்துகளில் 56 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். விஷ்மி குணரத்ன 30 ஓட்டங்களைப் பெற்றார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் உம்-இ-ஹானி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
141 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் நெருக்கடிக்கு முகங்கொடுத்து 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பாகிஸ்தான் அணிக்காக ஒமைமா சுஹைல் 36 ஓட்டங்களையும், துபா ஹசன் 24 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதிக் கட்டத்தில் தஸ்மியா ரூபாப் ஆட்டமிழக்காமல் 11 பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அணியின் வெற்றிக்கு அது போதுமானதாக அமையவில்லை.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சத்யா சந்தீபனி 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்களிப்புச் செய்தார். சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகியாக இமேஷா துலானி தெரிவு செய்யப்பட்டார்.
இதன்மூலம் பரபரப்பான போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி, சுப்பர் சிக்ஸ் சுற்றில் முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.









