கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான 71 வயதுடைய பாப்பரசர் பதினான்காம் லியோவுக்கு, ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட நுரையீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
எனினும், அறுவை சிகிச்சையின்போது அகற்றப்பட்ட நுரையீரல் திசுக்களில் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வத்திக்கான் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
பாப்பரசர் லியோவின் நுரையீரலில் சிறிய கட்டி ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின்போது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய, ரோமிலுள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், அவரது வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி அகற்றப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், குறிப்பிடத்தக்க சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
அதேவேளை, அகற்றப்பட்ட திசுக்களின் மருத்துவப் பரிசோதனையில், நுரையீரல் அடினோகார்சினோமா எனப்படும் புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோயின் அடுத்தகட்ட நிலை மற்றும் மேலதிக சிகிச்சைகள் தொடர்பான முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பாப்பரசர் வைத்தியசாலை அறைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். அவர் சுமார் ஒரு வாரம் வைத்தியசாலையில் தங்கியிருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அவரது பொதுநிகழ்ச்சிகள் அக்டோபர் 20ஆம் திகதி வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் தென் அமெரிக்க நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









