நடுக்கடலில் வழிதவறி, உதவிக்காக காத்திருந்த 17 வயது சிறுவனுக்கு இறுதியில் இலங்கை கடற்படையினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தலைமன்னாருக்கு அப்பால் மணல்திட்டில் சிக்கித் தவித்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
தலைமன்னாருக்கு அப்பால் கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா கப்பலின் அதிகாரிகள், மணல்திட்டில் ஒருவர் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்ற கடற்படையினர் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் 17 வயதுடைய சிறுவன் என்பதும், தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் வந்த நிலையில் கடற்பரப்பில் வழிதவறி மணல்திட்டில் சிக்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
நீண்ட நேரம் கடலில் சிக்கியிருந்த சிறுவனை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு தம்மென்னா கப்பலுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறுவனின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர், மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக அவரை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடலில் மேற்கொள்ளப்படும் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளின் போது, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளையும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.









