கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2018ஆம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆறு வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது.
எனினும், சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இந்த பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குறித்த பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது எனத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.









