ஒரே இரவில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூக கருத்தை பிரதிபலிக்கும் வகையில் இயக்குனர் என். அரவிந்தனின் இயக்கத்தில் வெளியான GOOD DAY திரைப்படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் ராமலிங்கம் கதையோடு கணக்கச்சிதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு சில கதாபாத்திரங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு படம் நகரும்போதும், கதையிலுள்ள உயிரோட்டம் ரசிகர்களை தொடர்ந்தும் படத்தை பார்ப்பதற்கான தூண்டுதலை இறுதிவரை வழங்குகிறது.
ஒரு மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம், குடும்பச்சூழ்நிலை , தொழிலிடத்தில் ஏற்படும் நெருக்கடி என்பவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் மன அழுத்தத்தோடு இருக்கும்போது மேற்கொள்ளும் தீர்மானங்களும், எடுக்கும் முடிவுகளும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, அவற்றினால் ஏற்படும் விளைவுகள் குறித்து படத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
படத்தின் பாடல்கள் , இசை என்பன படத்திற்கு மேலும் உயிரோட்டத்தை வழங்கியுள்ளது.
GOOD DAY திரைப்படம் இந்தியாவில் பலரது பாராட்டையும் பெற்ற நிலையில் அதனை இலங்கையில் திரையிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, திரைப்படத்தின் சிறப்புக்காட்சி கொழும்பு Galle Face Mall ல் உள்ள PVR திரையரங்கில் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய திரை மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். கவிஞரும் முன்னணி பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் நிகழ்வை சிறப்பான முறையில் ஒழுங்குசெய்து செயற்பாடுகளை வழிநடத்தியிருந்தார். இலங்கையில் இந்திய கலைஞர்கள் எதிர்காலத்தில் திரைப்படங்களை வெளியிடும்போது இரு நாட்டு கலைஞர்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் இவ்வாறான நிகழ்வுகள் வாய்ப்பாக அமையும்.
நாளைய தினம் இலங்கையிலுள்ள 50 திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தை இலங்கையில் சங்கவி பிலிம்ஸ் வெளியிடுகின்றனர்.
.








