2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சதி செய்தல், அதற்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை, 22 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
23 ஆயிரத்து 270க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடரப்பட்ட இவ்வழக்கு நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில், அரச தரப்பு சார்பில் 2309 சாட்சிகள், சாட்சியமளித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்தன.
அனைத்து சாட்சியங்களையும் பரிசீலித்த பின்னர், வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதற்கமைய வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.









