காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் பாயும் நோர்வூட், ஷோர்ட்ரி தோட்டப் பகுதியில் கால்வாயை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸார் அங்கு சென்றபோது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு நீர் பம்பிகள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், ஹட்டன் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி முழுமையாக மூடப்பட்டிருந்த குறித்த பகுதியில், சுமார் 100 பேரை ஈடுபடுத்தி மீண்டும் இரவு பகலாக சட்டவிரோத அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கால்வாயை மறித்து பாரிய குழிகளைத் தோண்டி மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வு நடவடிக்கையால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கால்வாயை மறித்து அமைக்கப்பட்டிருந்த குழிகளை உடைத்தெறிந்து அகற்றுவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








