லிந்துலை – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு (04) இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
5 வீடுகளைக் கொண்ட லயன் தொகுதியில் அமைந்திருந்த ஒரு வீடு முற்றாக தீயில் அழிவடைந்துள்ளதுடன் , ஏனைய 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறித்த 5 வீடுகளிலும் வாழ்ந்த 41 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக மிளகுசேனை தோட்ட கலாச்சார மண்டபத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு வருகைதந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மின்னொழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
பிரதேச வாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்து லிந்துலை- பத்தனை பொலிசார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் தேவையான உடனடி நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதேச அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை கடந்த 3ம் திகதி யட்டியந்தோட்ட பனாவத்தை 2ம் இலக்க தோட்டத்திலுள்ள லயன் அறைகளில் ஏற்பட்ட தீ விபத்தினால் இருவர் உயிரிழந்த நிலையில் 5 வீடுகள் தீயில் அழிவடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.








