நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில், பிரதேச சபை தவிசாளர் யோகராஜா தலைமையில் நடைபெற்ற ‘தவிசாளர் கிண்ண’ கரப்பந்தாட்ட தொடரின் இறுதி நாள் போட்டிகள் கந்தப்பளை கொமர்ஷல் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல முன்னணி அணிகள் பங்கேற்றன.
தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கந்தப்பளை நைட்ரைடர்ஸ் (Kandapola Knight Riders) அணியும், தலவாக்கலை கூம்வூட் சேம் (Thalawakele Coomwood Sam) விளையாட்டுக்கழமும் மோதின.
இதில் திறம்பட விளையாடிய கந்தப்பளை நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் (இலங்கை விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய) கொழும்பு SVP அணியும், உடப்புஸ்ஸல்லாவ அல்டிமேட் கிரீன்பீல்ட் (Udapussellawa Ultimate Greenfield) அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் கொழும்பு SVP அணி வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இதனையடுத்து நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் கந்தப்பளை நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட கொழும்பு SVP அணி, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றதுடன் ‘தவிசாளர் கிண்ணத்தையும்’ கைப்பற்றி சாம்பியன் பட்டத்தைச் சூடிக்கொண்டது.
இப்போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைக் கந்தப்பளை நைட்ரைடர்ஸ் அணியும், மூன்றாம் இடத்தை தலவாக்கலை கூம்வூட் சேம் அணியும், நான்காம் இடத்தை உடப்புஸ்ஸல்லாவ அல்டிமேட் கிரீன்பீல்ட் அணியும் பெற்றுக்கொண்டன.









