‘மலையக மகிழ்ச்சி’ திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் இரண்டு புதிய வீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சரான சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் பண்டாரவெல பிரதேச செயலகப் பிரிவின் நாயபெத்த தோட்டத்திலும்,ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவின் மலவன் பகுதியில் நடைபெற்றது.
இத்திட்டம் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் பண்டாரவெல பிரதேச செயலகப் பிரிவின் நாயபெத்த தோட்டத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள 11 குடும்பங்களுக்கும், ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவின் மலவன் பகுதியில் அபாயத்தில் உள்ள 23 குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் கட்டப்படுகின்றன.
இந்த 34 வீட்டு அலகுகளை அமைப்பதற்காக அரசாங்கம் ரூபாய் 108 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டு அலகிற்கும் ரூபாய் 28 இலட்சம் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக ரூபாய் 4 இலட்சம் செலவிடப்படுகின்றன. மேலும், பயனாளிகளுக்கு 10 பேர்ச் நிலமும் வழங்கப்படுகிறது.
நீண்ட காலமாக நிலச்சரிவு அபாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலையான, பாதுகாப்பான மற்றும் கௌரவமான வீடுகளை வழங்குவதே ‘மலையக மகிழ்ச்சி’ திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், தோட்டப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்த அபாயங்களை குறைப்பது அரசின் முக்கிய கொள்கையாகும்.
நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்திர பண்டார மற்றும் அம்பிகா சாமிவேல் ஆகியோர் உட்பட பிரதேச அரசியல் அதிகாரிகள், அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலகம உள்ளிட்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பயனாளி குடும்பங்கள் கலந்து கொண்டனர்.








