2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எதிர்வரும் 28 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
போட்டிகள் மே மாதம் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளன.
கிரிக்கட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புக்களை வழங்கும் ஐபீஎல் தொடரில் இம்முறையும் பல்வேறு சுவாரஸ்யங்களை எதிர்பார்;க்க முடியும்.
இம்முறை தொடரை ஆரம்பிக்கும் முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் ஒன்றையொன்றை எதிர்கொள்ளவுள்ளன.
போட்டிகளுக்கு மழையினால் பாதிப்பு ஏற்பட்டால், அது குறித்த முன்னாயத்தங்களும் , நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வட இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளமையினால் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக போட்டி தடைப்பட்டால், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படவுள்ளதோடு, குறித்த காலப்பகுதியில் முழு போட்டியையும் நடத்த முடியாவிட்டால், குறைந்தது 5 ஓவர்களைக் கொண்ட போட்டியை நடத்தி முடிவை தீர்மானிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென ஐபீஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றிபெறும் அணி தீர்மானிக்கப்படும்.
எனினும் 5 ஓவர்களுக்குக் கூட போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், குறித்த போட்டி இரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்படும்.
இறுதிப்போட்டிக்கு மாத்திரம் மேலதிக நாள் ஒதுக்கப்பட்டு மழையால் போட்டி நடைபெறாவிட்டால், அடுத்த நாள் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்;டாவது தினமும் மழையினால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையிலுள்ள அணி செம்பியனாக தெரிவுசெய்யப்படுமென ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.









