யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘மில்லர்’ திரைப்படத்தின் ஆரம்ப விழாவில்,பிரபல இலங்கைத் தமிழ் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலையில் கவிதை ஆற்றிய சிறப்பை பெற்றார்.
IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான கந்தையா பாஸ்கரனின் தயாரிப்பில் உருவாகும் ‘மில்லர்’ திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு, அண்மையில் யாழ் வலம்புரி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தென்னிந்திய திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்களான இயக்குநர் பாண்டிராஜ், ‘மஹாராஜா’ இயக்குநர் நித்திலன்இ, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழ் திரைப்படத் துறை, ஊடகத் துறை மற்றும் கலையுலகின் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்வில் தனது கவிதையை ஆற்றிய பொத்துவில் அஸ்மின், ‘வைரமுத்து என் தாய்’ என்ற மகுடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சமர்ப்பித்த வாழ்த்துக் கவிதை, பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
நிகழ்வை குறித்து கருத்து தெரிவித்த பொத்துவில் அஸ்மின் ‘கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காண வேண்டும் என்பது பலரின் கனவாகவுள்ள நிலையில் அவர்முன் நின்று கவிதை பாடும் பாக்கியத்தை தான் பெற்ற வரம் என்று குறிப்பிட்டார்.
தனது சிறிய வயதில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள் வழியேதான் சந்தித்தித்ததாகவும், அவரின் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை தன் வாழ்வையும் இலக்கியப் பாதையையும் வடிவமைத்த முக்கிய நூலெனவும், 2013-ல் வெளிவந்த ‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்ற தனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் வழங்கிய வாழ்த்துரை தனக்கு மிகப்பெரிய அங்கீகாரமெனவும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் தொகுத்த ‘கலைஞர் 100 – கவிதைகள்100 ‘ நூலில் தன் ‘திருக்குவளை சூரியன்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளதாகவும் தான் நேசித்த மாபெரும் கவிஞரின் முன்னிலையில், அவரை பற்றிய கவிதையைப் பாடும் பாக்கியம் கிடைத்தமை, தன் இலக்கிய வாழ்வின் உச்ச அங்கீகாரம் எனவும் இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பல இளம் கவிஞர்களுக்கு இதுவொரு கனவு மாதிரியான வாய்ப்பெனவும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்விழாவை ஏற்பாடு செய்து இவ்வாறான அரிய கலைச் சந்திப்பை உருவாக்கிய IBC நிறுவனரும் தொழில் அதிபருமான கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கு தன் மனம் நிறைந்ந நன்றிகளை தெரிவித்துள்ளார்.









