தாய்லாந்தில் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா இன்று (ஒக்டோபர் 22) தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான தாக்சின் நிறுவிய கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பல தசாப்த கால ஷினவத்ரா குடும்ப அரசியலின் முடிவை வெளிப்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
39 வயதான பேடோங்டார்ன் ஷினவத்ரா , கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதம் தொடர்பான நெறிமுறை மீறல் காரணமாக ஓகஸ்ட் மாதம் தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், சுமார் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
பியூ தாய் கட்சி பேடோங்டார்னின் ராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த செயற்பாடு கட்சியின் முழுமையான மாற்றத்திற்கு வழிவகுக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனது ராஜினாமா கட்சியை மேம்படுத்த உதவுமெனவும், தேர்தலில் வெற்றி பெற முடியுமெனவும் பேடோங்டார்ன் ஷினவத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தான் கட்சி உறுப்பினராக செயற்படவுள்ளதாகவும் தாய்லாந்திற்காக தொடர்ந்து கடினமாக பங்களிப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்சித் தலைவராக அவர் வெளியேறுவது தாய்லாந்து அரசியலில் குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடும் நிலையில் ஷினவத்ராக்கள் தொடர்ந்தும் பியூ தாய் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கருத்துக்கள் உள்ளன.








