மேற்கு சூடானின் மர்ரா மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு இராணுவ கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது. அந்நாட்டில் பெய்த கன மழையை அடுத்து தாராசின் எனும் கிராமத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதில் குறித்த கிராமம் முழுமையாக அழிவடைந்துள்ளது, சமதளமாக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மாத்திரமே உயிர்தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களிடம் சூடான் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முதல் அந்நாட்டில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தால் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் சுமார் 12 மில்லியன் பேர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது இயற்கை அனர்தத்தாலும் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை உலக நாடுகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.









