ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பல அனுமதியற்ற கட்டடங்கள், டிக்கோயா நகர சபை அதிகாரிகளால் பொலிஸாரின் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
தற்போதைய அரசாங்கத்தின் ‘வாழ்விட நகரம்’ (Living City) திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, முறையற்ற வகையில் காணப்படும் ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தை ஒழுங்கான திட்டமிடலின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக, அங்குள்ள அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற நகர சபை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, நகர சபையின் வருமான நிர்வாகி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அனுமதியற்ற கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர், அனுமதியற்ற வியாபாரிகளுக்காக அனைத்துவித வசதிகளையும் கொண்ட தனியான இடமொன்றை அமைக்கவும், அங்கு நுகர்வோர் இலகுவாகச் சென்று கொள்வனவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதிகளை ஏற்படுத்தவும் நகர சபை கவனம் செலுத்தியுள்ளது.
ஹட்டன் நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் தமது வியாபார நடவடிக்கைகளை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும் என ஹட்டன் பொதுச் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்








