ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க சார்பாகப் பிணை நின்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் பிணையாக செலுத்தியிருந்த பணத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று (30) உத்தரவிட்டார்.
எயார்பஸ் விமானக் கொள்வனவு வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிரியங்கா நியோமாலி தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச பொலிஸார் ஊடாக அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிணையாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட சலுகைக் கோரிக்கையை நிராகரித்த நீதவான், பிணைத் தொகையில் 20 மில்லியன் ரூபாவை இன்று செலுத்தவும், எஞ்சிய தொகையை செலுத்த எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை கால அவகாசமும் வழங்கினார்.
இதேவேளை, வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமீந்திர ராஜபக்ஷவுக்கும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.









