வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 170.04 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடி தாதியர் குடியிருப்பு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட அரசியல் மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
புதிய குடியிருப்பு வளாகத்தின் மூலம் 48 தாதிய உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதி வழங்கப்படவுள்ளதுடன், அதன் நிர்மாணப் பணிகளை 2027 ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக 235 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வடமாகாணத்திற்கு 300 சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், வைத்தியசாலைகளுக்கு தேவையான புதிய மருத்துவ உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.








