உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று (20) கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநயக்க வாழ்துக்களை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றது போன்று, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் பிரார்த்தனையுடன் மத அனுஷ்டானங்களில் ஈடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தீபாவளி தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிப்பதாகவும், தற்போது நம்முன்பாக உள்ள பாரிய சவாலைப் போன்றே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் போதைப்பொருள் மற்றும் மறைந்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் முயற்சிகளின் முக்கிய நோக்கமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜைகள் மட்டுமன்றி இந்நாட்டில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைத்து மக்களின் உடல், மன,பௌதீக மற்றும் உணர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பிற்காக அரசாங்கமென்ற வகையில் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், அனைத்து மதவாத மற்றும் இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரும் தமதுஅனைத்து சிவில், அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய, சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்யும் விளக்குகளுடன், ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ தொடர்பிலான இந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒன்றிணைந்து செல்லும் பாதை மேலும் ஒற்றுமையாக இருக்கட்டுமென பிரார்த்திப்பதாவும், இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து பக்தர்களுக்கும் அவர்களின் இதயங்களை பிரகாசமாக்கும் மகிழ்ச்சிகரமான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநயக்க வாழ்துக்களை தெரிவித்துள்ளார்.








