பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியின் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு பலத்த நீரோட்டம் காரணமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாகவும் ,நீரில் மூழ்கிய பலல் காப்பாற்றப்பட்டபோதும் 5 பேர் பலியானதாகவும், பாகிஸ்தானில் பேரிடர் முகாமைத்துவ ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரவி , சட்லஜ் மற்றும் ச்செனாப் ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 4,100க்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் ,அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
1.5 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக 423 நிவாரண முகாம்கள், 512 வைத்திய சிகிச்சை முகாம்களும் , 432 கால்நடை வைத்தியசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு சுமார் 900 பேர் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபர தரவுகள் தெரிவிக்கின்றன.









