நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிட தொகுதி மக்களின் உரிமைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடமானது சிவப்பிரகாசம் வாசன் ஜெசிந்தா தம்பதியரின் திட்டதிற்குகமைய புலம்பெயர்ந்து வாழும் நயினாதீவு உறவுகள் மற்றும் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்க வாறன்டோர்ப் கிளையின் நிதிப் பங்களிப்பினூடாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம்இ பல் மருத்துவ பிரிவு, தாதியர்களுக்கான ஓய்வறை, ஈசிஜி பிரிவு, சத்திரசிகிச்சை பிரிவு, முதன்மை பராமரிப்பு பிரிவு உள்ளிட்ட சுகாதார வசதிகளுடன் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிட தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
66 மில்லியன் ரூபா கட்டிட நிர்மானத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும் தளபாடங்கள், மருத்துவ உபகரணங்கள் என்பன நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபை, சுகாதாரத் திணைக்களம் மற்றும் நலன்விரும்பிகளால் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜாஇ, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன்பத்திரன, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், ஊர்காவற்றுறை மற்றும் வேலணை சுகாதார வைத்திய அதிகாரிகள்,கடற்படையினர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றனர்.









