இலங்கை மற்றும் சுற்றுலா பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான ருவென்றி – 20 தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஸ் அணி 83 ஓட்டங்களினால் வெற்றியை பதிவுசெய்து தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
தொடரின் ஆவது போட்டி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணியின் தலைவர் ச்சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.
பங்களாதேஸ் அணி ஆரம்பத்திலேயே 180 முதல் 185 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அணியின் தலைவர் நாணய சுழற்சியின்போது குறிப்பிட்டிருந்தார்.
அதனை அண்மிக்கும் வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணித்தலைவர் லிட்டொன் டாஸ் 50 பந்துகளில் 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, ஷமீம் ஹொசைன் 27 பந்துகளில் வேகமான 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கையணியின் பந்துவீச்சில் பினுர பெர்ணாண்டோ 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
178 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கையணி சிறந்த துடுப்பாட்ட வரிசையை கொண்டிருந்த போதும், தொடர்ச்சியாக விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.
பெத்தும் நிசங்க அதிகபட்சமாக 32 ஓட்டங்களையும், தசுன் ச்சானக 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கையணி 15.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து , 94 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.
பங்களாதேஸ் அணிக்கெதிராக இலங்கையணி ருவென்றி – 20 போட்டியில் பெற்றுக்கொண்ட மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஸ் அணியின் தலைவர் லிட்டொன் டாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்குமிடையிலான அடுத்த போட்டி நாளை மறுதினம் புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.









