நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கவனக்குறைவாக செயற்பட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டில் உள்ள பல்வேறு பொருட்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாலும், அவற்றை எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டாமெனவும், அதன் காரணமாக உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழல் உள்ளதாகவும் , வெள்ள நீரில் விளையாடுவதற்கு பெற்றோர் பிள்ளைகளை அனுமதிக்கக்கூடாதெனவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் பேசும் மக்கள் சீரற்ற காலநிலை தொடர்பில் தெரிவிக்க அல்லது உதவி பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 107 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியுமென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.









