நேபாளத்தில் 7,126 மீட்டர் உயரமான ஹிம்லுங் ஹிமால் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளனர்.
நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில், Nar Phu பகுதியில் அமைந்துள்ள ஹிம்லுங் ஹிமால் மலையின் அடிவார முகாமை இன்று காலை பனிச்சரிவு தாக்கியுள்ளது.
இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 7,126 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
பனிச்சரிவு காரணமாக ஆரம்பத்தில் 10 பேர் காணாமல் போயுள்ளதாக மலையேற்ற அமைப்புகள் தெரிவித்திருந்தன.
அவர்கள் மலையேற்ற வீரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக பணியாற்றிய பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக நேபாளத்தின் Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் அனைவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அங்கு இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கைகளும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
காத்மாண்டு மற்றும் போக்ரா பகுதிகளில் ஹெலிகொப்டர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், மோசமான வானிலை காரணமாக அவற்றால் சம்பவ இடத்தை உடனடியாக சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மற்றும் மலையேற்ற நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
மேலும், நேபாளத்தின் பல மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மலையேற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.








