யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வடமாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டுமெனவும் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கில் சுதந்திரமான மற்றும் அமைதியான சூழலை ஏற்படுத்தத் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் ,ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ,வடக்கு முழுவதும் உலா வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பொது தேர்தல் காலத்தில் வடக்கு பக்கம் தலைகாட்டவில்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் இருவரில் ஒருவரே வெற்றிபெறுவார் என்ற செய்தியே வடக்கு மக்கள் வழங்கியிருந்தனர். எனினும் தற்போது வடக்கிலுள்ள மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை வெளிப்படுத்துவதாக வடக்கிலுள்ள முக்கிய தலைவர் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பரம்பரை காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுமெனவும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போதைப்பொருளின் பிடியில் சிக்கியுள்ள வட பகுதியை முழுமையாக அதிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகைதந்து தமது அறிவாலும் செல்வத்தாலும் வடக்கை கட்டியெழுப்ப வேண்டுமெனவும் அதற்கான காலம் உதயமாகியுள்ளததாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.








