பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியதோடு, மே தினக் கூட்டத்துக்கு கொட்டகலைக்கு வந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனினும் அவர் வீட்டுக்கும் சென்றுவிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்
அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுமெனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மக்கள் எந்நாளும் அரசாங்க நிவாரணங்களை நம்பி வாழமுடியாதெனவும் மக்கள் சுயமாக எழுந்து நிற்ககூடிய வகையில் பொருளாதார சூழ்நிலையை உருவாக்கபடுமெனவும்
ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்களை தேடி அடிக்கடி வந்தவர்கள்இ தற்போது கொழும்பிலேயே முடங்கியுள்ளதாகவும் அதுதான் அவர்களின் அரசியலெனவும் ஆனால் தாம் என்றும் மக்களுக்காக களத்தில் நின்று மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இனி அரசியல் சண்டி தனங்களுக்கு இடமில்லையெனவும் மக்களை அடக்கி ஆளும் நிலையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள் இணைந்து மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்கியுள்ள நிலையில் மக்களுக்குரிய சேவைகள் உரிய வகையில் முன்னெடுக்க உள்தாகவும், நுவரெலியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியுமெனவும் அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ,முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்பட்டு, மக்கள் பணம் சேமிக்கப்படுமெனவும் முன்னாள் ஜனாதிபதிகளை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல எனவும் கொள்கை ரீதியிலான தீர்மானமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.









