நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை சீற்றம் காரணமாக அடைமழையுடன், கடும் காற்று வீசி வருகிறது.
தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, மண்சரிவு அனர்த்தங்களும் பதிவாகியுள்ளன. இதுவரை 12 மரணங்கள் வரை சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்களில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மண்மேடுகள் சரிந்துவிடும் அபாயமுள்ள பகுதிகள் , வீடுகளுக்கு அருகில் மரங்கள் காணப்படும் பகுதிகளில் உள்ளவர்களும், ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் உள்ளவர்களும் மிகுந்த அவதானத்துடன் காலநிலை தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் கடற்படை மற்றும் விமானப்படை களத்தில் இறங்கியுள்ளன.
வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளின் மீட்பு பணிக்காக விமானப்படையின் பெல்-212 மற்றும் பெல்-412 ரக ஹெலிகொப்டர்கள் மூன்றுடன் ராணுவத்தினரும் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை பகுதிகளில் மீட்பு பணியில் படகு சேவைகளும் கடற்படை மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.








