230 தசம் 64 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பு வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மருத்துவ உத்தியோகத்தர்களுக்குப் போதிய தங்குமிட வசதிகள் இல்லாத நிலையில், அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 48 மருத்துவ அதிகாரிகளுக்கு குடியிருப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன், நிர்மாணப் பணிகளை 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், முதற்கட்ட நான்கு மாடிக் குடியிருப்பு வளாகத்தின் நிர்மாணத்திற்காக வடமாகாண சபை 184 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 150 மில்லியன் ரூபா செலவில் மருந்துக் களஞ்சியசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் நாட்களில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டிய பின்னர் வைத்தியசாலைக்கு விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.








