சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியாளர் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இன்று (19) அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று காலை நடைபெறும் நிகழ்வில், புதிய பணியாளர் குடியிருப்பு வளாகத்திற்கும் மருத்துவமனையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
336 மில்லியன் ரூபாய் மொத்த நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டங்களின் கீழ், 282.52 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடனும், மருந்தகத்துடனும் கூடிய பணியாளர் குடியிருப்பு வளாகம் அமைக்கப்படவுள்ளது.
இதன் கட்டுமானப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனுடன் இணைந்து, வைத்தியசாலையின் லிப்ட் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 53 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் 2027ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண மக்களுக்கு மேலும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் கீழ் இந்த அபிவிருத்திப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இன்றைய நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.








