கொழும்பு மட்டக்குளி – ராஸ்ஸமூனகந்த பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், வத்தளை திசையிலிருந்து அதிவேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பல வாகனங்களுடன் மோதியுள்ளது.
இதன்போது, மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் 64 வயதுடையவர்கள் எனவும், மற்றுமொருவர் 44 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய காரின் 52 வயதுடைய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த குறித்த சாரதி தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









