இலங்கையில் முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில், முன்பள்ளி வயதிலுள்ள சிறுவர்களில் 64 சதவீதமானோர் தினமும் 30 நிமிடங்களுக்கும் அதிகமான நேரத்தை கைபேசி அல்லது கணினி போன்ற டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பதில் செலவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின்படி, முன்பள்ளி சிறுவர்கள் தினமும் 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆய்வில் 32 சதவீதமான சிறுவர்கள் தினமும் 10 முதல் 11 மணித்தியாலங்களுக்கும் குறைவாக உறங்குவதாகவும், சுமார் 43 சதவீதமான சிறுவர்கள் உணவு உண்ணும்போது திரைகளைப் பார்த்துக்கொண்டே உணவருந்துவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், சுமார் 80 சதவீதமான சிறுவர்களே தினமும் இருவேளை பல் துலக்குவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறுவர்களை பராமரிக்கும் பெற்றோர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களில் சுமார் 56 சதவீதமானோர் சிறுவர்கள் மீது கோபப்படும் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகளின் பராமரிப்பில் தந்தையர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாகவும், 53 சதவீதமான தந்தையர்களே குழந்தைகளுடன் நெருக்கமாகச் செயல்படுவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு, முன்பள்ளி சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சுகாதார மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வழிகாட்டித் தொடர் ஒன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.








