இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான விவசாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் கமநல மாளிகையில் நடைபெற்றது.
இலங்கை – சீனா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் ஆகிய துறைகளில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது சீனத் தூதுவரின் விசேட கவனம் பசுமை இல்ல (Greenhouse) விவசாயம் மற்றும் ஸ்மார்ட் விவசாயம் (Smart Agriculture) மீது செலுத்தப்பட்டது.
தற்போது சீனா, மொபைல் செயலிகளின் (Apps) ஊடாக விவசாய நிலங்களுக்கு ஏற்ற மண், ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளை அளவிடுவதுடன், அவற்றின் அடிப்படையில் விவசாய நடவடிக்கைகளை நிர்வகிக்கும் நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்க சீனா தயாராக இருப்பதாக சீனத் தூதுவர் தெரிவித்தார்.
மேலும், கடல் நீர் சூழலிலும் பயிரிடக்கூடிய மேம்பட்ட கலப்பின நெல் வகைகள் தம்மிடம் இருப்பதாகவும், வறண்ட மற்றும் ஈரமான காலநிலைக்கு ஏற்ப காணிகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பங்களும் சீனாவிடம் உள்ளதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
சேவை, கைத்தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றோடொன்று இணைத்து, ஒருங்கிணைந்த அபிவிருத்தியை நோக்கி முன்னேறுவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.









