மலையக வாழ் மக்களுக்கு நில உரிமை கோரி தலவாக்கலை நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் கொண்ட கொழும்பிற்கு நடைப்பயணத்தை ஆரம்பித்த 7 வயது பாடசாலை மாணவனை ஹட்டன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
லிந்துலை மௌசாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த பிரேம்ராஜ் கார்த்தி என்ற 7 வயது சிறுவன், நேற்று காலை நடைப்பயணத்தை ஆரம்பித்த நிலையில் , பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு வழங்கிவந்தனர்.
மலையக வாழ் மக்களுக்கு நில உரிமை கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் கடிதம் வழங்கும் நோக்கிலேயே சிறுவனின் நடைபயணம் அமைந்திருந்தது.
அத்துடன் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு மிகக் குறைந்த நேரத்தில் பயணம் செய்து மக்களின் பிரச்சினைகள் தீர்க்கவும் , தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு மிகக் குறைந்த நேரத்தில் பயணம் செய்து சாதனை படைக்கும் நோக்கில் இந்த நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
அதற்கமைய தலவாக்கலையில் தொடங்கி கொட்டக்கலை நகர் வழியாக சுமார் 21 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஹட்டனில் உள்ள மல்லியப்பு சந்தியை அடைந்தபோது, ஹட்டன் பிரதேச மகளிர் பணியகத்தின் பிரதம ஆய்வாளர் குமாரி விஜேசிங்க மற்றும் ஹட்டன் நன்னடத்தை அலுவலக அதிகாரி ஆகியோர் சிறுவனின் குறித்த செயற்பாடு தொடர்பில் பல விடயங்களை அறிவுறுத்தியிருந்தனர்.
சிறு வயது மாணவனைப் பயன்படுத்தி இதுபோன்ற ஒரு நடைபயணத்தை நடத்துவது சாத்தியமில்லை என குறித்த சிறுவனுக்கும், அவரது பெற்றோருக்கும் அறிவுறுத்தினர்.
அத்துடன் இச்செயற்பாட்டுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடைபயணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.









