பொகவந்தலாவை கெம்பியன் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் வண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் வண்டியில் பயணித்த 34 பாடசாலை மாணவர்கள் காயமடைந்த நிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காயமடைந்த மாணவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய மாணவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில் தங்கியிருந:து சிகிச்சை பெற்று வருவதாகவும் , அவர்களது நிலைமை பாரதூரமானது அல்ல எனவும் பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து – பொகவந்தலாவை நகர பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் வண்டியொன்று காலை 7.30 மணியளவில் ராணிகாடு -பொகவந்தலாவை பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
பஸ் வண்டியின் பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பஸ் வண்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலும், பாரிய விபத்தைத் தவிர்க்கும் நோக்கிலும் சமயோசிதமாக செயற்பட்ட சாரதி வீதியோரத்தில் காணப்பட்ட மண் மேட்டில் பஸ் வண்டியை மோதி நிறுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.










