இணைய வழி நிதி மோசடி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீன பிரஜைகள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் தொடர்பு சாதனங்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை 12:25 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குரிய MU-6912 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
அவர்கள் தமது உடல் மற்றும் ஆடைகளுக்குள் செல்லோடேப் மூலம் ஒட்டி மறைத்து வைத்திருந்த 383 பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 06 வைஃபை ரவுட்டர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜைகளிடம் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









