நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் ஒரு நாள் மற்றும் டி – 20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதோடு 2024-2025 ஆண்டுகளுக்கான மத்திய ஒப்பந்தத்திலிருந்தும் விலகியுள்ளார்.
நடைபெற்றுவரும் டி – 20 உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கேன் வில்லியம்சன் தனது முடிவை அறிவித்துள்ளார்.
டி – உலகக் கிண்ண வரலாற்றில் நியூசிலாந்து அணி முதல் சுற்றுடன் வெளியேறிய முதல் சந்தர்ப்பமாக இம்முறை தொடர் அமைந்துள்ளது.
கேன் வில்லியம்சன் 2024-2025 ஆண்டுகளுக்கான மத்திய ஒப்பந்தத்திலிருந்து விலகிய போதிலும் நியூசிலாந்து அணி சார்பில் அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலும் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் மத்திய ஒப்பந்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
அணியை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் அதற்காக தொடர்ந்தும் பங்களிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடுவதை பொக்கிஷமாக கருதுவதாகவும் வில்லியம்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் லொக்கி பெர்கூசனும் நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நியூசிலாந்து கிரிக்கெட் சபை , கேன் வில்லியம்சனின் தீர்மானம் தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ளதோடு, தொடர்ந்தும் நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடவேண்டுமென குறிப்பிட்டுள்ளது. வில்லியம்சன் 75 டி –ருவென்றி மற்றும் 91 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார்.







