முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்கென வருகைதந்துள்ளார்.
இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவேண்டுமென அவருக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளார்.
அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில், மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு மேற்கொண்ட பயணம் குறித்தும், அதற்கான செலவீனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக செயற்பட்ட சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக பணிபுரிந்த செண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் ஏற்கனவே குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.









