இலங்கையின் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (27) இரவு 9.00 மணிக்கு வெளியிட்ட இந்த அறிவிப்பு, இன்று (28) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேசங்கள்:
பதுளை மாவட்டம்: ஹல்துமுல்லை, பசறை.
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர, புலத்சிங்கள.
கண்டி மாவட்டம்: யட்டிநுவர, தும்பனை, ஹதரலியத்த, உடபளாத்த, கங்க இஹல கோரளை, உடுதும்பர, தொலுவ, உடுநுவர.
கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, மாவனெல்லை, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை.
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை.
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை கிழக்கு, நில்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, நோர்வூட், அம்பகமுவ கோரளை, தலவாக்கலை, வலப்பனை.
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, கிரியெல்ல.
குறித்த பகுதிகளில் மலைச்சரிவுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, மண்மேடுகள் இடிந்து விழுதல், கற்கள் உருண்டு விழுதல் மற்றும் மண் திட்டுக்கள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.









