வீதிவிபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த வேயங்கொடையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், தனது உடல் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளித்துச் சென்றுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞர், மூளைச்சாவடைந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோர் உறுப்புத் தானத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவக் குழுவினரால் அவரது இதயம், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படையின் உதவியுடன் குறித்த உறுப்புகள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இளைஞரின் இதயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் முக்கியமாக, தமது மகனை இழந்த துயரத்திலும், ஏனைய உயிர்களைக் காப்பாற்றுவதற்காக உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்த பெற்றோரின் மனிதநேயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.








