தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்தில் உள்ள ஹ்வாசோங் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கைத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9.10 மணியளவில் ஹ்வாசோங் நகரின் ஜங்கான்-மியோன் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வேலை முடிந்து தங்குமிடத்துக்கு கால்நடையாகச் சென்றுகொண்டிருந்த சுமார் 30 வயதுடைய இரண்டு இலங்கையர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீதியின் ஓரமாகச் சென்றுகொண்டிருந்த இருவரும் எதிர்த்திசையில் வந்த 7.5 தொன் எடையுடைய லொறியின் சரக்குப் பகுதியில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த ஒரு பாகத்தில் மோதியுள்ளனர்.
இதன்போது அவர்களின் தலை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஹ்வாசோங் சியோபு பொலிஸார், கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 50 வயதுடைய லொறி சாரதிக்கு எதிராக தென் கொரியாவின் போக்குவரத்து விபத்துகள் தொடர்பான விசேட சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றபோது சாரதி மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதும் பொலிஸாரின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்த இரண்டு இலங்கையர்களின் அடையாளங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
விபத்து தொடர்பான டாஷ்கெம் (Dashcam) காணொளிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து தென் கொரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









